Tuesday, November 06, 2007

369. உடல் நலத்தை கெடுக்கும் தீபா'வலி'

வர வர தீபாவளியை நினைத்தால அலர்ஜியாக இருக்கிறது. ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்ததிலிருந்து, இந்த ஆறு வருடங்களாக, என் இரண்டாவது மகளுக்கு தீபாவளி என்றாலே நடுக்கம் தான். இந்த சத்தமும், புகையும் அவளை வெகுவாக பாதிப்பதால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் அவளுக்காக வீட்டுக்கதவுகளையும், சன்னல்களையும் திறக்கவே மாட்டோ ம்! நேற்று NDTV-யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். இந்த பட்டாசுகளால் எவ்வளவு பெரிய உடல் நலக்கேடு என்பது தெளிவாக விளங்கியது. சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

1. 2005-இல் உச்சநீதி மன்றம் 120 டெசிபல்களுக்கு மேலாக ஒலிச்சக்தி கொண்ட பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை விதித்திருந்தது. ஆனால், அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. இப்போதுசந்தையில் உள்ள 90% பட்டாசுகள் (ஊசிப் பட்டாசு, வெங்காய வெடி போன்றவற்றைத் தவிர!) 140 டெசிபல்களுக்கு மேல் ஒலி ஏற்படுத்தபவையே! நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பட்டாசின் அட்டையின் மீது 'தயாரித்த மாதம்' மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும், எந்த 'வருடம்' என்ற தகவல் இருக்காது. மாட்டிக் கொண்டால், அந்த பட்டாசு 2005-க்கு முன் தயாரிக்கப்பட்டது என்று சுலபமாக கூறி தப்பி விடலாம்! அது போலவே, 10 மணிக்கு மேல் வெடி வைக்கக் கூடாது என்ற கோர்ட் / போலீஸ் உத்தரவையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது.

2. பட்டாசு வெடிப்பதால் மூன்று வித தீங்குகள் ஏற்படுகின்றன. ஒன்று, அதிலிருந்து வரும் ஒளி கண்ணுக்குக் கெடுதல், இரண்டு, வெடிச்சத்தத்தால் கேட்கும் திறனுக்கு பாதிப்பு என்பதுடன், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒருவித trauma ஏற்படுகிறது. நோயாளிகள் எத்தனை அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள் என்பதை சற்று யோசித்தால், குறைந்தபட்சம் பெரும் சத்தம் ஏற்படுத்தும் வெடிகளையாவது வெடிக்காமல் இருப்போம்.

மூன்று, பட்டாசுப் புகையில் உள்ள நச்சு (சல்பர், பாஸ்பரஸ் .. சார்ந்த) வாயுப்பொருட்கள், காற்றில் suspended particles ஆக மிதந்து, அக்காற்றை நாம் சுவாசிப்பதால், நுரையீரலுக்கும், மூச்சுக் குழாய்க்கும் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது. அந்த நச்சுப் புகையால், கண்களுக்கும், தோலுக்கும் கூட கெடுதல் விளைகிறது.

3. அந்த ஒரு நாளில் மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசை கொளுத்தி/வெடித்து கரியாக்குகிறோம். இப்படி ஒவ்வொருவரும் கரியாக்கும் பணத்தை அநாதை இல்லங்களுக்கோ, தர்ம ஸ்தாபனங்களுக்கோ வழங்கினால் கொஞ்சம் மன நிம்மதியாவது பதிலுக்கு பெற இயலும்!

4. சுற்றுச்சூழலுக்கு பட்டாசின் நச்சுப்புகையால் எத்தகைய மாசு ஏற்படுகிறது என்பதை சொல்லி மாளாது. தீபாவளியை வெடி வைக்காமல் கொண்டாட முடியாது என்ற பட்சத்தில், அதற்கு ஒரு மாதம் முன்பாகவே, நாம் நமது இரு/நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தீபாவளி வரை தவிர்த்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்து, பின் தீபாவளி அன்று "போனஸாக" கொஞ்சம் பட்டாசு கொளுத்தி மகிழலாம் :)

5. நகரமெங்கும் வெடிக்காமல், ஒரு சில நிர்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்கலாம். இப்போதெல்லாம் பலர், தீபாவளி அன்று நகரங்களின் பட்டாசு இரைச்சல் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க, அமைதியான இடங்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

6. நமது சிவகாசிப் பட்டாசுகள் போதாதென்று, தற்போது சீனப் பட்டாசுகள் சந்தைக்கு வருகின்றன. இவை நம் பட்டாசுகளை விட (நம்மையும், சுற்றுச்சூழலையும்) அதிகம் பாதிக்கின்றன. ஆனால், இந்த சீன ஃபேன்ஸி வகைப் பட்டாசுகளுக்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது.

நாமாக, பிரச்சினையை உணர்ந்து திருந்துவதில்லை, சட்டம் போட்டாலும் அதை மதிப்பதில்லை :(
நமது சந்ததிகளுக்கு என்ன மாதிரி (வாழ்வதற்கு மிகக் கடினமான) ஒரு பூமியை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை என்பது தான் மிக்க வேதனைக்குரியது.

Anyway, நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 369 ***

11 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

dondu(#11168674346665545885) said...

நான் சமீபத்தில் 1960-ல் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்தபோது எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் பட்டாசு புகையில் உள்ள சல்ஃபர் டையாக்ஸைடால் கொசுக்கள் கொல்லப்படுகின்றன என்றாரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

delphine said...

நகரமெங்கும் வெடிக்காமல், ஒரு சில நிர்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்கலாம். ///
ஆனால் எங்க நம்ம மக்களுக்கு ரோட்டின் நடுவில்தான் வைத்து வெடிக்க வேண்டும் பாலா!

said...

ஓய் டோண்டு ! அப்படின்னா கொசுக்களை கொல்ல தினமும் தீபாவளி கொண்டாட சொல்றீரா? இந்த "சமீபத்தில்" 1650 ம் ஆண்டு , "சமீபத்தில்" 1960 ம் ஆண்டு அப்படீங்கறதை விடமாட்டீரா?

enRenRum-anbudan.BALA said...

டோ ண்டு அவர்களே,
//நான் சமீபத்தில் 1960-ல் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்தபோது எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் பட்டாசு புகையில் உள்ள சல்ஃபர் டையாக்ஸைடால் கொசுக்கள் கொல்லப்படுகின்றன என்றாரே.
//
ஏதாவது "அலம்பல்" பண்ணனும்னே இப்படி சொல்றீங்களா ? ;-)

சல்பர் டையாக்ஸைட் கொசுக்களை அழிக்கும் என்பது சரி தான், ஆனால், கொசுவை விடவும் அது நமது உடல் நலத்துக்குக் கேடு என்பது தான் மேட்டர், It is a slow poison :(

enRenRum-anbudan.BALA said...

Delphine,
வாங்க டாக்டர் :)

யார் நாம சொல்றதை கேட்கிறாங்க ? ஏதோ நாம ஓதறதை ஓதிடுவோம், ஏத்துக்கறவங்க இருப்பாங்க என்ற நம்பிக்கையில !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

வைத்தி,

வாங்க, Cool, Cool :)

டோ ண்டு அப்டி தான், அவருக்கு எல்லாமே "சமீபத்தில்" தான். அவர் அப்டி சொல்றதுக்கு 2 காரணங்கள் இருக்கு.

1. அவருக்கு ஞாபக சக்தி அதிகம்
2. தான் இளைஞன் என்று அவர் நம்புகிறார் !

எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

இதில் அலம்பல் ஏதும் இல்லை.

ஜானகிராமையர் சீரியசாகவே கூறினார். நாங்களும் அக்காலக் கட்டத்தில் சாட்டை வாணம் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வீட்டுக்குள் கொளுத்தி இண்டு இடுக்ககளில் எல்லாம் புகை போட்டிருக்கிறோம்.

பல சமயம் அறைகளில் சல்ஃபரை கொளுத்தி, கதவுகளை எல்லாம் சாத்தி வைத்திருக்கிறோம், (நாங்கள் அச்சமயம் அறைக்கு வெளியேதான் இருப்போம்).

இன்னொரு விஷயம் காசைக் கரியாக்குவது. அது ஒரு உயர்ந்த தத்துவத்தை நோக்கி செல்கிறது. ஞானிகளுக்கு கிட்டிய மனோபாவம். வருடத்துக்கு ஒரு நாளாவது அது நமக்கு வேண்டும் என்று சமீபத்தில் 1956-ல் ராமகிருஷ்ண சாஸ்திரிகளின் உபன்யாசம் ஒன்றில் எங்கள் பாண்டுரங்க மடத்தில் வைத்து கேட்டுள்ளேன்.

இந்த சமீபத்தில் விஷயம். நீங்கள் சொல்வது கரெக்ட். எனக்கு ஞாபக சக்தி உண்டுதான். இரண்டாவதாகச் சொன்ன காரணத்தில்தான் சிறிது திருத்தம். நான் உண்மையிலேயே இளைஞனே. I think young so I am.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

NGOs working in different forms to collopase deepavali festival.....
1. Environment......, projecting child labour problem in sivakasi(which is not true)....
2. lightening candle rather than traditional lightening.....
so....so....
If you look as a pain, even taking food also painful......

said...

deepavalium pattasum vivek-paniyil sollavendumendral adhu nammudiya kalacharam :)

Eppidi-irundhalum pattasin arumai andha vayadhil(5-15),migavum inippana(sweet-i vida) vishayam..adhai avvaluvu elidhil vidamudiyum endru thonavillai..

True that once we grow up,we find it nuisance and very disturbing..

BTW,dondu sir-edam ippodiya nigazchi 1956,patri melvivaram kidaikkuma..

sundaram

Several tips said...

நல்ல பதிவு

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails